கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஓய்வு ஆசிரியைக்கு ஒரு வாரத்தில் இன்சூரன்ஸ் பணம் வழங்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற மூதாட்டிக்கு ஒரு வாரத்திற்குள் இன்சூரன்ஸ் பணம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பொற்கமலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், செங்கோட்டை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளேன். இதற்காக ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது. கடந்த 24.8.2020ல் தென்காசி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றேன். 10 நாள் சிகிச்சை முடித்து திரும்பினேன். இதற்காக ரூ.2,62,596 கட்டணம் செலுத்தினேன். இந்த பணத்தை இன்சூரன்ஸ் திட்டத்தில் ேகட்டு விண்ணப்பித்தேன்.

ஆனால், அனுமதிக்கப்படாத மருத்துவமனையில், தீவிரம் அல்லாத சாதாரணமான கொரோனா சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் பொருந்தாது எனக்கூறி நிராகரித்தனர். இதை ரத்து செய்து இன்சூரன்ஸ் பணத்தை திரும்ப வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: 73 வயதாகும், சர்க்கரை நோயாளியான மனுதாரர், இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். கொரோனாவுக்கு அரசு அனுமதித்த மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றுள்ளார். மனுதாரர் ெகாரோனா சிகிச்சை கட்டணம் செலுத்தியதில் எந்த முரண்பாடும் இல்லை. கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மட்டுமல்ல கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், ஓட்டல்கள் ஆகியவை சிகிச்சை கூடங்களாக செயல்பட்டன. இப்படிப்பட்ட சூழலில் சிகிச்சைக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்தாலே ேபாதும் என்ற நிலைதான் இருந்தது. இந்த நிலையில்தான் 73 வயதான மனுதாரர் பல்வேறு சிகிச்சைகளுக்கு இடையே கொரோனாவால் பாதித்தார்.

இதற்கு இன்சூரன்ஸ் பணம் தர மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது அரசு அதிகாரிகள் போதிய அக்கறை காட்டவில்லை. மனுதாரருக்கு மறுத்தது என்பது மனிதாபிமானமற்றது, பகுத்தறிவில்லாது, நியாயமற்றது என்பதை விட பொதுநலனுக்கு எதிரானது. எனவே, நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் இன்சூரன்ஸ் பணத்தை கேட்டு ஒரு வாரத்திற்குள் மீண்டும் மனு செய்ய வேண்டும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைத்து, ஒரு வாரத்திற்கள் இன்சூரன்ஸ் பணத்தை வழங்க வேண்டும். வயதான காலத்தில் மனுதாரருக்கான நீதியை தேடி நீதிமன்றத்திற்கு வரவைத்து சிரமத்தை ஏற்படுத்தியதற்காக இந்த வழக்கின் எதிர்மனுதாரர்கள் தரப்பில் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்தை முன்மாதிரியாக நினைத்து வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஓய்வு ஆசிரியைக்கு ஒரு வாரத்தில் இன்சூரன்ஸ் பணம் வழங்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: