அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமைதியாக நடைபெற்றது: போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்திற்குள்ளும், வெளியேவும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசலும் இல்லை. இதற்காக திறமையாக செயல்பட்ட 2 ஆயிரம் போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றதால் மைதானத்தை சுற்றிலும் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் எவ்வித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே திட்டமிட்டப்படி முறையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போட்டி நடைபெறும் மைதானம் அருகே போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. போட்டியைக் காண வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் பைக் மற்றும் கார்களை பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், போட்டி நடைபெற்ற மைதானத்திலும் எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனவே, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை போக்குவரத்து நெரிசல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் இன்றி நல்ல முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 2,000 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்று வரும் நாட்களில் நடைபெறும் போட்டியிலும் திட்டமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமைதியாக நடைபெற்றது: போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: