கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

விவசாயிகள் மற்றும் விவசாயத்தை சார்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கு வருமானம் கொடுக்கும் அட்சய பாத்திரமாக கால்நடைகள் விளங்குகின்றன. இத்தகைய கால்நடைகளை நோய்களில் இருந்து காப்பது அவசியம். கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நோய்கள் குறித்தும், அவற்றின் அறிகுறிகள் குறித்தும் பார்ப்போம்.

தொற்று நோய்கள்

கால்நடைகளை சப்பை நோய், தொண்டை அடைப்பான், அடைப்பான் நோய் போன்ற சில தொற்று நோய்கள் திடீரென தாக்கி குறுகிய கால அளவில் இறப்பை ஏற்படுத்திவிடும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகளவிலான கால்நடைகள் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கும். சில அறிகுறிகளை வைத்து இந்நோய்கள் தாக்கி இருப்பதை அறிந்துகொள்ளலாம். கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தால் தொற்று நோய்கள் இருப்பதை உறுதி செய்யலாம். தசைப்பகுதியில் நிறம் மாறி கொர கொரவென உணரக்கூடிய வீக்கம் ஏற்படுவது சப்பை நோயின் அறிகுறி. தொண்டை அடைப்பான் நோயில் தொண்டையில் வீக்கம் ஏற்பட்டு கீழ் நோக்கிப் பரவும். வாயைத் திறந்து கொண்டு சத்தத்துடன் மூச்சுவிடுதல், வாயில் நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அடைப்பான் நோய் அறிகுறிகளின்றி வெகு குறுகிய காலத்தில் மரணத்தை ஏற்படுத்தும். கால்நடைகள் இறந்தவுடன்தான் நோயின் அறிகுறிகள் தென்படும். இறந்த கால்நடைகளின் இயற்கை துவாரங்களின் வழியாக உறையாத கருமை நிறமான ரத்தம் வெளியேறுவது அடைப்பான் நோயின் முக்கிய அறிகுறி.

நஞ்சுகளை உட்கொள்ளுதல்

கால்நடைகள் நச்சுத் தாவரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை உட்கொண்டுவிட்டால், விஷத்தன்மை முற்றி திடீரென இறப்பு கூட ஏற்படும். வாயைத் திறந்து பரிசோதனை செய்யும்போது, வாயில் புண்கள் இருந்தால் புண் உண்டாகக்கூடிய நச்சுப் பொருட்களை உண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம். மூச்சு, வாய் ஆகியவற்றில் தென்படும் நாற்றம், வாந்தியின் தன்மை போன்றவற்றின் மூலமும் எந்த வகை நச்சுப் பொருட்களை உட்கொண்டுள்ளது என்பதை அடையாளம் காணலாம். நச்சுச் செடிகளின் இலைகள், குச்சிகள் போன்றவை வாயிலும் கன்னங்களின் உட்பாகங்களிலும் பற்களிலும் சிக்கி இருந்தால் அவைகளைக் கொண்டும் எந்த நச்சுச்செடிகளை உட்கொண்டன என்று அறியலாம்.

வயிற்று உப்புசம்

கால்நடைகள் சில தீவனங்களை உட்கொண்டதனாலோ அல்லது வேறு பொருட்களை உட்கொண்டதனாலோ அஜீரணம், உப்புசம் ஏற்பட்டு கடுமையான வயிற்று வலி ஏற்படும். இதனால் கால்நடைகள் இறக்கும் வாய்ப்புகள் கூட ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மாட்டின் வயிறு பாகம் வீங்கிக் காணப்படும். இடது வயிற்று பாகத்தைக் கையினால் தட்டினால் மத்தளம் தட்டுவது போன்ற சத்தம் உண்டாகும். வயிற்று உப்புசம் ஏற்படும்பொழுது உருவாகும் நச்சுக்கள் ரத்தத்தில் கலந்து நுரையீரல் மற்றும் இருதயத்தை இயக்கும் மூளையின் மைய இயக்கங்களைப் பாதிப்பதன் மூலம் ரத்த ஓட்ட சமநிலை பாதிக்கப்பட்டு விரைவில் இறப்பை உண்டாக்கிவிடும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவர்களை அணுகி உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம். 

The post கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நோய்கள்! appeared first on Dinakaran.

Related Stories: