வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு

டாக்கா: வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்பியதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. வங்கதேத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் 650 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தீவிர போராட்டத்தையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி பல்கலைகழகங்கள், கல்லூரிகள்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அங்கு சகஜ நிலை திரும்பி வருவதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு, அந்த நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுசின் அறிவுரையின்படி கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அங்கு பள்ளி,கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஹசீனா மீது மேலும் ஒரு படுகொலை வழக்கு
கடந்த 2013ம் ஆண்டு டாக்காவில் ஹிபாசத் இ இஸ்லாம் என்ற அமைப்பின் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டாக்கா நீதிமன்றத்தில் ஹசீனா மீது படுகொலை வழக்கு பதிவு செய்வதற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: