வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி நடந்தது. துப்பாக்கியுடன் வந்த நபரை சரியான நேரத்தில் பாதுகாப்பு படையினர் பார்த்து கைது செய்ததால் டிரம்ப் உயிர் தப்பினார். அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் நடந்த நேரடி விவாதத்தில் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சிறப்பான பதிலளித்த கமலா ஹாரிசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது.
இந்நிலையில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் உள்ள கோல்ப் கிளப்பில் டிரம்ப் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மைதானத்தின் வேலியை ஒட்டி ஒருநபர் ஏ.கே.47 துப்பாக்கியுடன் டிரம்ப்பை கண்காணித்துள்ளார். சரியான நேரத்தில் இதை கவனித்த டிரம்ப்பின் பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் ரகசிய சேவை ஏஜென்ட் வீரர்களில் ஒருவர், துப்பாக்கியுடன் இருந்த நபரை நோக்கி சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டதும் அந்த நபர் தப்பி ஓடினார். உடனடியாக டிரம்ப் அங்கிருந்து பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த நபர் டிரம்ப்பிடம் இருந்த வெறும் 900 முதல் 1500 அடி தூரத்தில் நெருக்கமாக இருந்துள்ளார். அவர் துப்பாக்கியால் சுட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டதால் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து தான் பத்திரமாக இருப்பதாகவும், ரகசிய சேவை ஏஜென்ட் வீரர்கள் மீண்டும் தனது உயிரை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறினார். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் நடந்த பேரணியின் போது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் காதை குண்டு துளைத்த நிலையில் ரத்த காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார்.
அந்த நபரை ரகசிய சேவை ஏஜென்ட் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தற்போது 2வது கொலை முயற்சி சம்பவத்துடன் தொடர்புடையதாக ஹவாயில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ரியான் வெஸ்லி ரவுத் (58) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனம் செய்துள்ளார். வடக்கு கரோலினாவை சேர்ந்த இவர் மீது குற்ற வழக்குகளும் உள்ளன. கடந்த 2 மாதத்தில் டிரம்ப் மீது 2வது கொலை முயற்சி நடத்தப்பட்டிருப்பது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
* அதிபர் பைடன் கண்டனம்
டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிசிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்ப் பாதுகாப்பாக இருப்பது அறிந்து அவர்கள் நிம்மதி அடைந்ததாக கூறி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து எப்பிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
The post அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது appeared first on Dinakaran.