இந்திய உறவுகளில் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா சமீா்!!

மாலே: இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகளில் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா சமீா் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தினரை முகமுது மூயிஸ் வெளியேற்றியதை தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் நிலவி வந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டது. சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் மாலத்தீவை ஆதரிக்கின்றன என்றார்.

சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளுடனும் நல்லுறவை தொடருவதே மாலத்தீவின் விருப்பமாகும். மாலத்தீவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தற்காலிகமானது. இதை திறம்பட கையாண்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர வரி நடைமுறைகளில் சீா்திருத்தம், அரசு சாா்பில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான செலவினம் குறைப்பு உள்பட பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அவர் கூறினார்.

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு முன்னாள் மந்திரிகள், விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுவும் இந்திய ராணுவத்தினரை வெளியேற உத்தரவிட்டார். அடுத்தடுத்து இந்தியா – மாலத்தீவு இடையேயான மனக்கசப்பு அதிகரித்த நிலையில், தற்போது மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி, எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

The post இந்திய உறவுகளில் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா சமீா்!! appeared first on Dinakaran.

Related Stories: