துப்பாக்கி சூடு சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிந்து எப்பிஐ விசாரித்து வருகிறது. டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்ட் டிரம்ப் தரப்பில் வெளியான செய்தியில், கோல்ப் கிளப்புக்கு வெளியே உள்ள புதர்களில் ஏகே-47 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே எப்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘புளோரிடாவின் பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள கோல்ப் கிளப்புக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அதிபர் டிரம்பை படுகொலை செய்வதற்கான முயற்சியாக தெரிகிறது’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 2 மணிக்கு நடந்தது. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டன. டிரம்ப் இருந்த இடத்தில் இருந்து 450 மீட்டர் தொலைவில் இருந்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹவாயை சேர்ந்த வெஸ்லி ரோத் (58) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது, கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரை கிளப்பின் ஹோல்டிங் அறைக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் பாதுகாப்பாக உள்ளார்’ என்று கூறினர். மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘என்னைச் சுற்றியுள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்; நன்றாக இருக்கிறேன். எதுவும் என்னைத் தடுக்காது. ஒருபோதும் நான் சரணடைய மாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை 13 அன்று, பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்பை கொல்லும் முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. மேடையில் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவரது காதில் தோட்டா பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரம்ப், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ் என்பவரை, சம்பவ இடத்திலேயே ரகசிய சேவை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் டிரம்பை படுகொலை செய்வதற்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது appeared first on Dinakaran.