ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி; பாகிஸ்தானை வீழ்த்தி வீட்டிற்கு அனுப்ப இந்தியா ஆயத்தம்: இன்றுடன் லீக் சுற்று நிறைவு

சென்னை: இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ள 7வதுஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றில் முதல் 4 இடம் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதுவரை 6 அணிகளும் தலா 4 போட்டிகளில் ஆடி உள்ளன. இதில் இந்தியா, மலேசியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த 2 இடத்திற்கு தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் இடையே கடும்போட்டி உள்ளது. சீனா வாய்ப்பை இழந்து விட்டது.

இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று மாலை 4 மணிக்கு ஜப்பான்-சீனா, மாலை 6.15 மணிக்கு மலேசியா-தென்கொரியா, இரவு 8.30 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன. தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் இன்று வென்றால் தான் சிக்கலின்றி அரையிறுதிக்கு செல்லமுடியும். தோல்வி அடைந்தால் வெளியேற வேண்டியது தான். டிரா செய்தால் மற்ற 2 போட்டியின் முடிவை பொறுத்து வாய்ப்பை பெறலாம்.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் நிச்சயமாக சவால் நிறைந்ததாக இருக்கும். நாங்கள் பீல்டு, பெனால்டி கார்னர் என இரு வகையிலும் கோல் அடித்து வருகிறோம். பந்தை அதிக நேரம் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் தடுப்பு ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக கோல் எல்லைக்குள் தடுப்பு ஆட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். எளிதில் பெனால்டி கார்னர் வாய்ப்பை எதிரணிக்கு வழங்கக்கூடாது’ என்றார்.

The post ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி; பாகிஸ்தானை வீழ்த்தி வீட்டிற்கு அனுப்ப இந்தியா ஆயத்தம்: இன்றுடன் லீக் சுற்று நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: