ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் 7 பதக்கங்களை சுட்டுத்தள்ளிய இந்தியா!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் துப்பாக்கிசுடுதலில் இந்தியா நேற்று ஒரே நாளில் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று அசத்தியது. மகளிர் தனிநபர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் (3 நிலை) இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா 469.6 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதே போட்டியில் களமிறங்கிய சக வீராங்கனை ஆஷி சோக்சி 451.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். சீனாவின் கியான்கியூ ஸாங் (462.3) வெள்ளி வென்றார்.

* மகளிர் 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) குழு போட்டியில் சிப்ட் கவுர் சம்ரா, ஆஷி சோக்சி, மனினி கவுஷிக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஒட்டுமொத்தமாக 1764 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டனர்.
* மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் குழு போட்டியில் இந்திய வீராங்கனைகள் மானு பேக்கர், ஈஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு 1759 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினர். இந்த போட்டியில் சீனா வெள்ளி (1756), தென் கொரியா வெண்கலம் (1742) வென்றன.
* ஆண்கள் ஸ்கீட் தனிநபர் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் அனந்த் ஜீத் சிங் நருகா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
* ஆண்கள் ஸ்கீட் குழு பிரிவில் அனந்த் ஜீத் சிங் நருகா, அங்கத் வீர் சிங் பஜ்வா, குர்ஜோத் சிங் கங்குரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது.

9 வயதில் 7வது இடம்!
ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் பார்க் ஸ்கேட்போர்டிங் பிரிவில் களமிறங்கிய பிலிப்பைன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த 9 வயது சிறுமி மேஸல் பாரிஸ் அலெகாடோ 7வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். ‘பதக்கம் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆசிய விளையாட்டில் ஸ்கேட்டிங் செய்தேன் என்ற பெருமையே எனக்குப் போதும். அடுத்து ஸ்ட்ரெய்ட்டா ஒலிம்பிக்தான்’ என்கிறது இந்த பொடிசு. அமெரிக்காவில் வசிக்கும் அலெகாடோ, ஆசிய போட்டிக்கு முன்பாக போர்ச்சுகல் நாட்டில் பயிற்சி, அங்கிருந்து சீனா பயணம் என்று பறந்து பறந்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற ஜப்பானை சேர்ந்த ஹினானோ குசாகியின் வயது 15 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னார்வத் தேடல்!
இவ்ளோ பேர் சேர்ந்து குப்பை பையில் என்னாத்தயா தேடறீங்கனு கேட்கத் தோணுதா? இது ஒரு தன்னார்வத் தேடல்! 5,23,000 சதுர மீட்டர் பரப்பளவு, 10,000 இருக்கைகள் கொண்ட ஹாங்சோ ஸ்டேடியத்தில், ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட ஒரு செல் ஃபோனைத் தேடுவது என்றால் சும்மாவா! ஹாங்காங் (சீனா) செஸ் அணியை சேர்ந்த 12 வயது சிறுமி லியு டியான் யி தனது ஃபோனைத் தொலைத்துவிட்டு தேம்பித் தேம்பி அழுவதை பார்க்க முடியாமல் தேடுதல் வேட்டையில் இறங்கிய இந்த டீம், ஆயிரக்கணக்காக குப்பை பைகளை பிரித்து ராத்திரி முழுக்க பொறுமையாகத் தேடி 24 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்துக் கொடுத்து பாராட்டுகளை அள்ளியிருக்கிறது. ‘அந்த சிறுமியோட அழுகையை ஆனந்தக் கண்ணீராகப் பார்க்கும்போது நாங்கள் பட்ட சிரமம் எல்லாம் ஜுஜுபிங்க’ என்கிறார்கள் இந்த தன்னார்வத் தொண்டர்கள்.

வெற்றிக்கு உதவிய கப்பிங் சிகிச்சை!
ஆண்கள் 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில், தென் கொரிய வீரர் ஜி யு சான் (21 வயது) தங்கப் பதக்கம் வென்றார். பைனலில் களமிறங்குவதற்கு முன்பாக கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்ட ஜி யு சான், சீன பாரம்பரிய சிகிச்சை முறைகளில் ஒன்றான ‘கப்பிங் சிகிச்சை’ எடுத்துக்கொண்டார். சூடான காற்று நிரப்பப்பட்ட சிறிய கண்ணாடிக் குடுவைகளை உடலில் பொருத்தி அளிக்கப்படும் இந்த வகை சிகிச்சை நீச்சல் வீரர்களிடையே பிரபலமாகி வருகிறது.

பைனலில் ரோஷிபினா
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் வுஷு 60 கிலோ எடை பிரிவு பைனலில் விளையாட இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி (மணிப்பூர்) தகுதி பெற்றார், அரையிறுதியில் வியட்நாமின் தி து என்குயெனுடன் நேற்று மோதிய ரோஷிபினா அபாரமாக வென்று, இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பதை உறுதி செய்தார். 2018, ஜாகர்தா ஆசிய விளையாட்டில் இவர் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் 7 பதக்கங்களை சுட்டுத்தள்ளிய இந்தியா! appeared first on Dinakaran.

Related Stories: