ஆந்திர மாநிலம் கடப்பா நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளரான தம்பியை எதிர்த்து அக்கா ஷர்மிளா போட்டி

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்பி பதவிக்கு போட்டியிடும் தம்பியை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா போட்டியிட உள்ளார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் என 3 அணியாக போட்டியிட உள்ளது. கடப்பா நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் அவினாஷ் போட்டியிடுகிறார். இவர், ஜெகன்மோகன் சித்தப்பாவான விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகன் மோகனின் மற்றொரு சித்தப்பாவான பாஸ்கர்ரெட்டியின் மகன் ஆவார்.

இந்நிலையில் தம்பியான அவினாஷ்ரெட்டியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவரும் முதல்வர் ஜெகன் மோகனின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக கடப்பா எம்.பி. பதவி ஒய்எஸ்ஆர் குடும்பத்தினரிடம் உள்ளது. 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் அவினாஷ்ரெட்டி எம்பியாக வெற்றி பெற்றார். அவர் 3வது முறையாக களத்தில் உள்ளார். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக போட்டியிட போவதாக ஷர்மிளா கூறி வருகிறார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடப்பா மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் ஜெகன்மோகன்- அவினாஷை குறிவைத்து ஒன்று சேர்ந்து களம் காண திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ள பல 2ம் கட்ட தலைவர்களுடன் ஷர்மிளா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஆந்திர மாநிலம் கடப்பா நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளரான தம்பியை எதிர்த்து அக்கா ஷர்மிளா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: