திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தல்: வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சென்னை: திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததையொட்டி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின்போது மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்தபோது, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும், விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதி உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் 14ம் தேதி அரசிதழில் வெளியிடப்படும். அன்றைய தினத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஜூன் 21ம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற ஜூன் 26ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படும். அன்றைய தினம் மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10ம் தேதி வாக்கு பதிவு நடைபெறும். ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூலை 15ம் தேதி முடிவுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 13 தொகுதிகள் விவரம்…
தமிழகம், பீகார், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் விக்கிரவாண்டி, பீகார் மாநிலம் ருப்பவுலி, ராய்கஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் மாநிலம் ரனாகாட் தக்‌ஷின், பக்டா ஆகிய தனி தொகுதிகளுக்கும், மேலும் அதே மாநிலத்தில் மனிக்டாலா தொகுதிக்கும், மத்தியப்பிரதேச மாநிலம் அமர்வாரா (எஸ்டி) தொகுதிக்கும், உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் மங்களூரு தொகுதிகளுக்கும், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் டேரா ஆகிய தொகுதிகளுக்கும், இமாச்சலில் உள்ள ஹமீர்பூர் மற்றும் நலகார்க் உட்பட மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 2021ல் பதிவான வாக்குகள்…
கடந்த 2021 தேர்தலின்போது திமுக எம்எல்ஏ புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அமமுக வேட்பாளர் அய்யனார் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர். அப்போது அதிமுக கூட்டணியில் பாமக, பாஜ இணைந்திருந்தது. ஆனால் இப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது. இனி வரும் தேர்தலிலும் பாஜ-வுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். இதனால் விழுப்புரம் மாவட்டத்துக்கு எந்த அறிவிப்பையும் அறிவிக்க முடியாது. சட்டசபை கூட்டத்தொடரில் மாநில அளவில் புதிய அறிவிப்புகள் வெளியிடலாம். ஆனால் அதை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்த முடியாது. அத்துடன் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய திட்டங்கள், புதிய பணிகளை செயல்படுத்த கூடாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல், விழுப்புரம் மாவட்டத்துக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.

The post திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தல்: வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: