NDA-ன் நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் மோடி..60 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்வு என ராஜ்நாத் சிங் புகழாரம்!!

டெல்லி : பழைய நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பிக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமித்ஷா, நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, அஜித் பவார், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அப்போது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் சாசன புத்தகத்தை மோடி தொட்டு வணங்கினார்.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.நாடாளுமன்ற என்டிஏ குழுத் தலைவராக பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித் ஷா வழிமொழிந்தார். பாஜக தேசியத் தலைவர் நட்டா, மூத்த தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் மோடி பெயரை வழிமொழிந்தனர். மோடியின் பெயர் முன்மொழியப்பட்டபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். என்டிஏ கூட்டணி அரசுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது. 60 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்று மோடி புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகில் மூன்றாவது முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. 1962க்கு பிறகு 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ளது,”என்றார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் ஒலிக்கும் பிரதமர் மோடி பெயர்,”என்றார். இறுதியாக பிரதமராக தேர்வான தீர்மானம் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post NDA-ன் நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் மோடி..60 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்வு என ராஜ்நாத் சிங் புகழாரம்!! appeared first on Dinakaran.

Related Stories: