மத்தியில் ஆட்சி அமைக்க இண்டியா கூட்டணி முயல வேண்டும்.. திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் சிவ சேனா, ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தல்

கொல்கத்தா : மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகளை இண்டியா கூட்டணி ஆராய வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஜூன் 9ம் தேதி [பொறுப்பேற்க உள்ள பாஜக கூட்டணி அரசு, குடியரசு தலைவர் விதிக்கும் காலக்கெடுவிற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபீக்க வேண்டும். இந்த நிலையில், பாஜகவை நெருக்கடிக்கு தள்ளி இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்றே, சந்திரபாபு நாயுடுவையும் நிதிஷ் குமாரையும் இண்டியா கூட்டணிக்குள் இழுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகிலேஷ் யாதவிடம் மம்தா பானர்ஜி அறிவுறுத்திய செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

90களில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைவதற்கு முலாயம் சிங் யாதவ் காரணமாக இருந்தார் என்பதை அகிலேஷிடம் மம்தா சுட்டிக் காட்டி இருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லியில் அகிலேஷ் யாதவை சந்தித்த திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் எம்.பி.டெரிக் ஓப்ரையன் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். அத்துடன் உத்தவ் சிவசேனாவிடமும் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இண்டியா கூட்டணிக்குள் கூடுதல் கட்சிகளை சேர்க்குமாறு ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தி உள்ளது. இதே ஆமோதித்துள்ள அகிலேஷ் யாதவ், இப்போதைக்கு சந்திர பாபுவும் நிதிஷ் குமாரும் மனமார மாட்டார்கள் என்பதால் பாஜகவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் பாஜக எம்பிக்கள் 3 பேர் தங்களோடு தொடர்பில் இருப்பதாக அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மராட்டியத்தில் சுயேட்சையாக வெற்றி பெற்ற காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் விஷால் பாட்டில் மீண்டும் காங்கிரசில் இணைந்த நிலையில், பீகார் சுயேச்சை எம்பியான பப்பு யாதவ் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் எந்த நேரத்திலும் பாஜகவுக்கு நெருக்கடி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

The post மத்தியில் ஆட்சி அமைக்க இண்டியா கூட்டணி முயல வேண்டும்.. திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் சிவ சேனா, ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: