விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 236 பேர் கைது

கூடலூர் டிச. 9: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 236 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தி.மு.க. கட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. கூடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நகர செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், விடுதலை சிறுத்தைகள் சகாதேவன், காங்கிரஸ் சாஜி, அம்சா மற்றும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தேவர்சோலை பஜாரில் நடைபெற்ற மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி விஜேஸ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ரமேஷ்பாபு, ஜோஸ், நாசர், விஜயன், மாதேவ் மூர்த்தி, திடீர்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பந்தலூர்: பந்தலூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நெல்லியாளம் நகர செயலாளர்  காசிலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், காங்கிரஸ் நிர்வாகி ஜெய்சல், ஐயுஎம்எல் நிர்வாகி ஆசிப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் 18 பேரை தேவாலா போலீசார் கைது செய்தனர். அதேபோல் எருமாடு பஜாரில் நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற தி.மு.க., காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சியை சேர்ந்த 83 பேரை போலீசார் கைது செய்தனர்.  அய்யன்கொல்லி பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏரியா கமிட்டி செயலாளர் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: