வங்கி முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்

 

ஊட்டி, ஜூலை 3: ஊட்டி-கோத்தகிரி சாலையில் கனரா வங்கி முன்பு மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் வழிந்தோட வசதியாக கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊட்டி-கோத்தகிரி சாலையில் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் இருந்து கழிவுநீர் வழிந்தோடுவதற்காக கழிவுநீர் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் வழியாக செல்லும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஒட்டி பெட்ரோல் பங்க், கனரா வங்கி, தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.  இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியது.

அண்மையில் பெய்த மழை காரணமாக கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் தேங்கியதால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் சாலையின் நடுவே நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது. இப்பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கால்வாயை அகற்றி விட்டு புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

The post வங்கி முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: