ஆடி மாத திருவிழா எதிரொலி அய்யலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடமதுரை : ஆடி மாத திருவிழாக்கள் எதிரொலியாக அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு, கோழி சந்தை நடைபெறும். இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு, கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிகளவில் வருகின்றனர்.

தற்போது ஆடி மாதத்தில் கிராம பகுதிகளில் நடந்து வரும் கோயில் திருவிழாக்களில் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. மேலும் கனரக வாகனம், தொழிற்சாலை நிறுவனங்கள் வைத்திருப்போர் ஆடி மாதத்தில் தங்களது குலதெய்வம், காவல் தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து அசைவ விருந்து வைப்பது வழக்கம்.

இதனால் நேற்று அய்யலூரில் கூடிய ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், கால்நடை வளர்ப்ேபாரும் சந்தையில் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றி சென்றனர். செம்மறி ஆடுகளை காட்டிலும் வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனை ஆனது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.7,500க்கும், செம்மறி ஆடுகள் ரூ.6,500க்கும் விற்பனை செய்யப்பட்டன. நாட்டுக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், கட்டு சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஆட்டுச்சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. சந்தை துவங்கிய 3 மணி நேரத்தில் ரூ.1 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனை நடந்தது. தொடர்ந்து திருவிழா விசேஷங்கள் இருப்பதால் வரும் வாரங்களில் இன்னும் அதிகமான விற்பனை நடைபெறும்’’ என்றனர்.

The post ஆடி மாத திருவிழா எதிரொலி அய்யலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: