வக்கீல் சரத்திடம் விசாரித்தபோது, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ சொல்லித்தான் இந்த சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஜெகன்மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தேனியைச் சேர்ந்த மகேஸ்வரி, போலீஸ் காவலராக 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் 2 ஆண்டுகளில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் கொடைக்கானலில் நைல் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், வங்கிகள், வெளிநாடுகளில் இருந்த கடன் வாங்கித் தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், ஆன்மீகத்தில் ஈடுபாடு என்று சொல்லி கருங்காலி மாலைகளை மாந்த்ரீகம் செய்து விற்பனையும் செய்து வந்துள்ளார். இதனால் பல அதிகாரிகள், விஐபிக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அரசியல் புரோக்கராக செயல்படத் தொடங்கியுள்ளார். இவருக்கும், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தில் ஜெயராமிடம் பல்வேறு வழக்குகளுக்கு ஆலோசனை பெற்று வந்துள்ளார். தேனியைச் சேர்ந்த இளம்பெண்ணின் தந்தையிடம் தனக்கு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளது.
பிரச்னையை நான் முடித்து தருகிறேன் என்று கூறி ரூ.25 லட்சம் பேரம் பேசியுள்ளார். மேலும் மகேஸ்வரிதான், ஜெயராமிடம் ஜோடியை பிரிக்க உதவி கேட்டுள்ளார். ஜெயராம்தான், ஜெகன்மூர்த்தியை போனில் தொடர்பு கொண்டு பேசி, உதவி கேட்டுள்ளார். ஜெகன்மூர்த்தி தனது கட்சியைச் சேர்ந்த வக்கீல் சரத் என்பவரை அனுப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் வாலிபரை கடத்தியுள்ளனர். பின்னர், ஆயுதப்படை ஏடிஜிபி அலுவலகத்துக்கும் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஜெயராமின் காரிலேயே வாலிபரைஅனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இப்போது இந்த விவகாரத்தில் போலீசில் அனைவரும் சிக்கியுள்ளனர். வாலிபர் கடத்தல் வழக்கில் ஒரு ஏடிஜிபி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வாலிபரை கடத்திய விவகாரம் ஏடிஜிபி ஜெயராம் கைது ஏன்? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.
