மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு மசூதியில் தங்குமிடம், உணவு


பூந்தமல்லி: மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் பலத்த மழை பெய்த நிலையில் பூந்தமல்லி நகராட்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பூந்தமல்லியில், வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வாலிபர்களும், பெண்களும் அறை, விடுதிகளில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மழை தாக்கத்தால் உணவின்றியும் அறைகளுக்கு செல்ல முடியாமலும் பலர் தவித்து வந்தனர். இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள புகழ்பெற்ற பழமையான பெரிய மசூதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்பட்டது. இந்த மசூதியில் ஆண்களுக்கு கீழ் தளத்திலும், பெண்களுக்கு மேல் தளத்திலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் செல்போன் சார்ஜர் போடுவதற்கும் தனியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி உணவின்றி தவித்த அவர்களுக்கு சூடான சுவையான உணவும் தயார் செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பாக கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவு உண்ண மாட்டார்கள் என்பதால் சைவ உணவை வழங்கினார்கள். பேரிடர் என வந்து விட்டால் தமிழகத்தில் ஜாதி மதத்திற்கு இடம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை இங்கு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தாங்கள் தொழுகை செய்யும் மசூதியில் அனைவரையும் தங்க வைத்து உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு மசூதியில் தங்குமிடம், உணவு appeared first on Dinakaran.

Related Stories: