கணினி ஆபரேட்டர்களுக்கு மீண்டும் பணி சங்க நிர்வாகிகள் கோரிக்கை பணி நீக்கம் செய்யப்பட்ட

வேலூர், நவ.22: பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக கணினி ஆபரேட்டர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை தற்காலிக கணினி இயக்குபவர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் வருவாய்த்துறையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக பணிபுரிந்து வந்தோம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நாங்கள் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வரை பல்வேறு திட்டங்கள் சார்ந்து எங்கள் பணியை செய்து வந்தோம்.

இந்த நிலையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி முடிந்ததால் தனி அரசாணை மூலம் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டோம். 10 ஆண்டுகள் பணி செய்து திடீரென நீக்கப்பட்டதால் நாங்கள் குடும்பத்துடன் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் தமிழக அரசு துறைகளில் புதிதாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடம் உருவாக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே, எங்களுக்கு தகுதியின் அடிப்படையில் மீண்டும் அரசுத்துறைகளில் கணினி ஆபரேட்டர் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: