கோவையில் தென்னிந்திய கப்பற்படை தளபதி ஆய்வு

கோவை, நவ.20: கோவை ரேஸ்கோர்ஸ் அருகே ரெட் பீல்டில் கப்பற்படை பயிற்சி மையம் (ஐ.என்.எஸ். அக்ராணி) உள்ளது. இங்கு கப்பற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இங்கு உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று மையத்துக்கு தென்னிந்திய கப்பற்படை முதன்மை தளபதியான அட்மிரல் சாவ்லா நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அவருக்கு கப்பற்படை பயிற்சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அவர் பயிற்சி மையத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர், கப்பற்படை தகவல் தொலை தொடர்பு மையம், அதிகாரிகளின் உணவு விடுதியில் தனி நபர் தங்கும் இடம் மற்றும் குழந்தைகள் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு ஆடியோ-விஷூவல் அறை, கணினி ஆய்வகம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், பயிற்சி அளிப்பவர்களுக்கு தலைமை மற்றும் மேலாண்மை திறன்களை வழங்குவதில் இம்மையம் பெற்ற முக்கிய பங்குகளை எடுத்துரைத்தார். இதில், கப்பற்படை மனைவியர் நலச்சங்கத்தின் (என்.டபுள்யூ.டபுள்யூ, ஏ.) தலைவி சப்னா சாவ்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: