விருத்தாசலம் கிளைச்சிறையில் கைதி இறந்த விவகாரம் குடும்பத்தினரிடம் நீதிபதி விசாரணை திருப்தி இல்லை: மனைவி பரபரப்பு புகார்

விருத்தாசலம், நவ. 10:  சிறையில் கைதி இறந்த விவகாரம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் நேற்று நீதிபதி விசாரணை நடத்தினார்.       

 கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் செல்வமுருகன்(39), முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 28ம் தேதி நெய்வேலி பிளாக் எண்-26ல் காவியா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்ததாக நெய்வேலி நகரத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து, விருத்தாசலம் கிளை சிறையில் கடந்த மாதம் 30ம் தேதி அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில் கடந்த 2ம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால், சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து செல்வமுருகனை சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீண்டும் 4ம் தேதி வலிப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 தகவலின் பேரில் விரைந்து வந்த குற்றவியல் நடுவர் ஆனந்த் வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் உடலை, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே செல்வமுருகன் மனைவி பிரேமா, தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் சித்ரவதை செய்து கொன்று விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், பிரேமா, அவரது உறவினர்களும் மறியல், போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் கைதி இறந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூகஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 இந்நிலையில் செல்வமுருகன் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 7ம்தேதி சிறைச்சாலையில் கைதியின் இறப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்த் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டார். தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். அப்போது சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் காலை 12 மணியளவில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் விசாரணையைத் தொடங்கினர். அங்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், குற்றப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் 7 குற்றப்பிரிவு போலீசாரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.  

 அதன்பின்னர் விருத்தாசலம் கிளைச் சிறையில் விசாரணை நடத்தினர். அப்போது கிளை சிறை காவலர்கள் மற்றும் சிறை கைதிகள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் விருத்தாசலம் கிளைச் சிறை கைதி செல்வமுருகன் இறந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் நேற்று அவரது மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் 6 பேரிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் எங்களுக்கு போதிய திருப்தி இல்லை என கூறி நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த பிரேமா கூறியதாவது, எனது கணவர் செல்வமுருகன் இறந்ததும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது, உறவினர்களின் ஒப்புதலின்படி விழுப்புரம் அரசு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.  

என் கணவர் இறந்தபோது போலீசார் மற்றும் அதிகாரிகள் கூறிய பதிலுக்கும், இன்று (நேற்று) நீதிமன்றத்தில் கூறும் தகவல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் எங்களுக்கு போதுமான நீதி கிடைக்குமா என தெரியவில்லை. அவ்வாறு என் கணவர் இறப்பில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நானும் என் பிள்ளைகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கூறினார். மேலும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எங்களிடம் இன்னும் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Related Stories: