வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை சின்னத்தில் ஓட்டு போட்ட பாஜக பிரமுகர்

வில்லியனூர், ஏப். 20: புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வில்லியனூர் தொகுதிகுட்பட்ட வி.மணவெளி பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை பாஜகவினர் உதவி செய்வதுபோல் அழைத்து வந்துள்ளனர். அங்கிருந்த வாக்குச்சாவடி பணியாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து அவரது பூத் சிலிப், வாக்காளர் அட்டையை சரிபார்த்து பெயரை படித்தபின் முதியவரிடம் கையொப்பத்தை பணியாளர்கள் பெற்றுள்ளனர். பார்வை தெரியாதவர் என அழைத்து வரப்பட்ட முதியவர் கையெழுத்தும் போட்டுள்ளார். அப்போதுகூட உஷார் ஆகாத வாக்குச்சாவடி பணியாளர்கள், உதவிக்கு வந்த நபருடன் முதியவரை வாக்களிக்கும் திரைமறைவு பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த முதியவருடன் அங்கு சென்ற பாஜக பிரமுகர் தாமரை சின்னத்துக்கு முதியவரின் வாக்கை தனது கையால் பதிவு செய்துவிட்டு வெளியே அழைத்து வந்து ரோட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனிடையே அந்த முதியவர், பாஜ பிரமுகர் தன்னை ஏமாற்றி அவர்களே ஓட்டு போட்டுவிட்டதாக தனது நண்பரிடம் புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னை அழைத்துக் கொண்டுபோய் அவர் பட்டனை அழுத்தி பதிவு செய்துவிட்டார் என புலம்புகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட முதியவர் நல்ல உடல்நலத்துடன் இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு வாக்குச்சாவடிக்கு வரும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக திமுகவினர் தேர்தல் துறையிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர்.

The post வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை சின்னத்தில் ஓட்டு போட்ட பாஜக பிரமுகர் appeared first on Dinakaran.

Related Stories: