போலி முகநூல் பக்கம் தொடங்கி கல்வி அதிகாரி பெயரில் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் பெயரில் போலியான முகநூல் பக்கம் தொடங்கி அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன். இவர் வேலூர் கொசப்பேட்டையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இவரது நண்பர்கள் பலர் அடுத்தடுத்து போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் ஐசியுவில் சிகிச்சையில் இருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தீர்களே?’ என்று கேட்டுள்ளனர். இதை கேட்டு எழிலன் அதிர்ச்சியடைந்து தனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது எதில் எவ்வித மாற்றமும் தெரியவில்லை.

இதுபற்றி கூறியதும் எழிலனின் நண்பர்கள், அவரது பெயரில் உருவாக்கப்பட்டிருந்த முகநூல் பக்கத்தை முழுமையாக ‘ஸ்கிரீன் ஷாட்’ படமாக எடுத்து எழிலனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தனர். இதனை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்த எழிலன், ‘யாரோ மர்ம ஆசாமி தனது முகநூல் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை டவுன் லோடு செய்து, தன்னை பற்றிய விவரத்தையும் அறிந்து போலியாக முகநூல் பக்கம் தொடங்கி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதை அறிந்தார்.

இதையடுத்து உடனடியாக தனது முகநூல் பக்கத்தில், யாருக்கும் நான் பணம் கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவிடவில்லை. எனது பெயரில் யாராவது பணம் கேட்டால் அதை தர வேண்டாம் என்று பதிவிட்டார். மேலும், தனக்கு நண்பர்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்த போலியான முகநூல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட் படத்தை பிரின்ட் அவுட் எடுத்து அதனுடன் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார், உயர்கல்வித்துறை அதிகாரியின் போலி முகநூல் பக்கம் மூலம் அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்ற ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 25 நாட்களுக்கு முன்பு வேலூர் நுண்ணறிவு போதை பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரனின் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் வேலூரில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: