கோவில்பட்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி நல்லகண்ணு பேட்டி

கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டியில் ஏஐடியுசி நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது.  பஞ்சாலை தொழிற்சங்க ஜீவா இல்லம் முன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன் தலைமையில் நடந்த இவ்விழாவில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஏஐடியுசி கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பது தான் அரசமைப்பின் அடிப்படை திட்டம். இந்த திட்டத்தை மறுக்கவோ, மாற்றோ வரக்கூடாது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னரே திமுக கூட்டணியில் எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

கோவில்பட்டி தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்போம். இருப்பினும்  பேச்சுவார்த்தையில்தான் இதுகுறித்து உறுதி செய்யப்படும். தமிழகம் குறித்து மத்திய அரசுக்கு கவலை இல்லை. ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை தவிர சட்டம், ஒழுங்கை எப்படி நிர்வகிப்பது என்ற கவலை துளியும் இல்லை’’ என்றார். அப்போது நகரச் செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு, தொழிற்சங்கம் குருசாமி, பரமராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: