ேபாதிய நிதியில்லாததால் வளர்ச்சி பணிகளில் ‘சுணக்கம்’ ஊராட்சி தலைவர்கள் புகார்

ஆண்டிபட்டி, அக்.22: போதிய நிதியில்லாததால் கிராம வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட 30 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வீட்டுவரி வசூலித்தல் முக்கிய வரி வருவாயாக இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அரசு மாதந்தோறும் வழங்கி வந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் வரி இனங்களை வசூல் செய்ய கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஊராட்சிகள் நிதியில்லாமல் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததால், பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், ‘‘அரசு கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி 6 மாதங்களுக்கு மேலாகிறது. இதனால் நோய்தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது வரை எந்த நிதியும் ஒதுக்காததால் கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் கடந்த 6 மாதமாக வரிவசூல் செய்யாத காரணத்தால், ஊராட்சிகளில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தின் மீது கிராமமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஊராட்சிகளுக்கு போதுமான நிதி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: