பசுவை மீட்க சென்ற விவசாயி சாவு

ஆத்தூர், அக்.21: ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் தவறி விழுந்த பசுவை மீட்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அப்பம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(58). இவர், நேற்று மாலை அங்குள்ள வசிஷ்ட நதிக்கரையில் பசு மாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது திடீரென வசிஷ்ட நதியில் மாடு தவறி விழுந்தது. இதனைக்கண்டு திடுக்கிட்ட ஆறுமுகம், வசிஷ்ட நதியில் இறங்கி  மாட்டினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, மணல் கொள்ளையர்களால் வெட்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் சிக்கிக் கொண்டு அலறி துடித்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் ஆறுமுகம் உயிரிழந்து விட்டார். அவரது உடலை ஆத்தூர் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாடும் உயிரிழந்தது.

Related Stories:

>