ஆவினங்குடியில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ₹1 லட்சம் நகை கொள்ளை

திட்டக்குடி, அக். 18:  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி - விருத்தாசலம் மெயின் ரோடு அருகே வசிப்பவர் சின்ராசு (40). இவரது வீடு ஆவினங்குடி காவல் நிலையம் அருகில் உள்ளது. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் இரண்டு மாதமாக குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த  3 பவுன் தங்க காயின், டாலர் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதுகுறித்து ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் விசாரணை செய்தனர். கடலூரில் இருந்து வந்திருந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் அர்ஜுன் யாரையும் அடையாளம் காட்ட வில்லை.இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் அருகே நடந்துள்ள இந்த கொள்ளை  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: