ஆற்றங்கரையோரம் துண்டிக்கப்பட்ட கால் வீச்சு கடலூர் வள்ளி விலாஸ் மருத்துவமனை மீது வழக்கு

கடலூர், அக். 16:    கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் கிடந்த துண்டிக்கப்பட்ட கால் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் மேற்கொண்ட விசாரணை தொடர்பாக வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடலூர் நகரப்பகுதியில் பிரதானமாக கெடிலம் ஆறு பாய்ந்து செல்கிறது. ஆற்றங்கரையோரம் அடிக்கடி குப்பை கொட்டுவது, மணல் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறு

வதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அரசு மற்றும்  வள்ளி விலாஸ் தனியார் மருத்துவமனைக்கு அருகாமையில் ஆற்றங்கரையோரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கால் ஒன்று கிடந்துள்ளது. படுகாயமடைந்து கால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள வந்தவரின் கால் இதுபோன்று வீசப்பட்டு உள்ளதா இல்லை ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 மேலும் அருகாமையில் உள்ள வள்ளி விலாஸ் தனியார் மருத்துவமனை மூலம் அறுவை சிகிச்சைக்கு பின் துண்டிக்கப்பட்ட நிலையில் காலை வீசி சென்றார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். வழக்கமாக அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவ மற்றும் பல்வேறு வகையான அறுவை சிகிச்சை, மனிதக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்படுவதாக போலீஸ் விசாரணையில் மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.   இருப்பினும் துண்டிக்கப்பட்ட காலை அஜாக்கிரதையாக வீசி சென்றது யார்? என்பது குறித்து புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் புதுநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வள்ளி விலாஸ் மருத்துவமனையின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் கட்டு கட்டும் துணியால் சுற்றப்பட்ட ஒரு ஆணின் இடது கால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மதில் சுவருக்கு பின்னால் உள்ள கெடிலம் ஆற்றில் கிடந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புது நகர் போலீசார் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் பெண்ணையாறு, கெடிலம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் இதுபோன்று கழிவுகளை கொட்டுவதும் நச்சுத்தன்மை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை வீசி செல்வதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: