ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நடவு தொய்வு வேளாண் பணிகளில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் விவசாயிகள் வலியுறுத்தல்

பள்ளிபாளையம், செப்.30: கால்வாய் பாசன பகுதியில் கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை நடவுப்பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையின் கிழக்கு கரை கால்வாய் பாசன பகுதியில், நெல் சாகுபடி பணிக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுவது வழக்கம். கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்களாகி நிலையில், 10 சதம் வயல்களில்தான் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்று நடவு நிறைவடைய வேண்டிய நிலையில், தற்போதுதான் பெரும்பாலான இடங்களில் நாற்றுவிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உழவு மற்றும் நடவு பணிகளுக்கு போதிய கூலியாட்கள் கிடைக்காததால்தான் இந்த ஆண்டு தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய ஊரக வேலை உறுத்திட்டத்தின் கீழ், கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு வருடத்தில் 100 நாட்கள், ₹200 தினக்கூலியுடன் வேலை வழங்கப்படுகிறது. விவசாய நடவு பணிகளில் ஒரு பெண் தொழிலாளிக்கு ₹350 முதல் ₹400 வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால், வேலை கடினம் என்பதால், கூலி தொழிலாளர்கள் பலரும் 100 நாள் வேலைக்கு மாறியுள்ளனர். இதனால், விவசாய பணிக்கு பெண் தொழிலாளர் பற்றாக்குறையால் நெல் நடவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய தொழில் தெரிந்த பெண்கள், அரசின் 100 நாள் வேலைக்கு செல்கின்றனர். இதனால், நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசு நடவு பணிக்கு அனுப்ப வேண்டும். அரசு வழங்கும் கூலியோடு மீதி கூலியை விவசாயிகளே தந்து விட தயாராக இருக்கிறோம். எனவே, தற்போதைய கூலியாட்கள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, நடவு பணிக்கு அனுப்ப வேண்டும்,’ என்றனர்.

Related Stories: