ஜமாபந்தியில் வழங்குவதற்காக ஆன்லைன் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி கோரிக்கை மனு

அணைக்கட்டு, செப்.29: அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட அணைக்கட்டு, ஊசூர் உள்ளிட்ட 5 வருவாய் ஆய்வாளர் அலுவலங்களில் நேற்று குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் மொத்தமாக 30 மனுக்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஊசூர் ஆர்ஜ அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த வருவாய் ஆய்வாளர் பூங்கோதை, 12 மணிக்கு முன் அலுவலகத்தை மூடிவிட்டு, வேறு ஒரு ஆக்கிரமிப்பு சார்ந்த பணிக்கு சென்று விட்டார். இதனால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன் மதியம் 2 மணி அளவில் அங்கு காத்திருந்த விவசாயி பெருமாள் என்பவரிடம் மனுவை பெற்றார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் நேரத்தை 10 மணியிலிருந்து 1 மணி வரை நீட்டிக்க வேண்டும். சமூக இடைவெளி முகக்கவசங்கள் அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஏரி தூர்வரும் பணியை பருவ மழை தொடங்குவதற்கு முன் தொடங்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ஜமாபந்தி மனுக்களுக்கு உடனயடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மனுக்களை பெற்று கொண்ட தாசில்தார் முருகன், மனுக்கள் கலெக்டர் மற்றும் சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அப்போது, விஏஓ கவுதம்பாபு, தனசேகர், பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். குடியாத்தம்: குடியாத்தம் தாலுகாவில் 12 மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ் குமார் அளித்த மனுவில், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், அதிமுக பிரமுகர் கே.வி.ராஜேந்திரன் கொடுத்த மனுவில், தாலுகா அலுவலகம் அருகே தனியார் கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்களை அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

பொன்னை: மேல்பாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று குறைவு தீர்வு கூட்டம் நடந்தது. இதில் மேல்பாடி வருவாய் ஆய்வாளர் ஜனனி தலைமையில் நடந்த கூட்டத்தில் மேல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவபுரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட அருந்ததியினர் அளித்த மனுவில், வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், ஓடை கால்வாய் பகுதியில் வீடுகள் கட்டி உள்ளதால், தற்போது பெய்யும் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Related Stories: