புதிய வேளாண் சட்டத்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் திருமாவளவன் எம்பி பேட்டி

கடலூர்,  செப். 29: புதிய வேளாண் சட்டத்தால் மாநில உரிமைகள் பாதிக்கப்படும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூரில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், விவசாயிகளுக்கு எதிராக  3 வேளாண் மசோதாக்களை பாஜ அரசு, அவசர சட்டமாக கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை நிறைவேற்ற  வேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி அறிவித்து நிறைவேற்றி அமலுக்கு கொண்டுவர வேண்டும்.

ஆனால் தற்போது குளிர்கால கூட்டத் தொடரில் அவசர சட்டமாக இந்த வேளாண் மசோதா சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளனர். இந்த வேளாண் சட்டம்  விவசாயிகளுக்கு முழுமையாக எதிரானது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் சிறு குறு விவசாயிகளின் அனைத்து நிலங்களும் பெரிய அளவிலான முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் எளிதாக மாறக் கூடும் என்றார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தால்  மாநில உரிமைகள் பறிக்கப்படும். இந்த சட்டதை திரும்ப பெற வேண்டும்.  மோடி அரசு இந்த சட்டத்தை திணிக்க கூடாது. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு இரட்டை வேடத்துடன் செயல்பட்டு வருகிறது.  மோடிக்கு ஒரு முகம், மக்களுக்கு ஒரு முகம் காட்ட வேண்டிய நிலையிலும்,  மோடி எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு கட்டுப்பட கூடிய அரசாக அதிமுக அரசு உள்ளது”. இவ்வாறு கூறினார்.

Related Stories: