வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி

வேலூர், மார்ச்.19: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் கிண்டி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகுதான் வெளியே அனுமதிக்கின்றனர். கொரோனா தொற்று ஏதேனும் தென்பட்டால் அவர்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி ரத்த மாதிரிகளை எடுத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், ஆர்டிஓ அலுவலகங்கள், அனைத்து சுற்றுலா தலங்கள், பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு வந்த 77 பேரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே வேலூரை சேர்ந்த மருத்துவ மாணவி (18) மற்றும் 33 வயது உடைய ஆண் ஒருவர் நேற்று காலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் தங்களுக்கு காய்ச்சல் இருப்பதாகவும், சளி, இருமல் இருப்பதாகவும் டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் டாக்டர்கள் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவ மாணவி கூறுகையில், கடந்த சனிக்கிழமை சென்னை தாம்பரத்ைத சேர்ந்த சக மருத்துவ மாணவியின் சகோதரி அண்மையில் ஜெர்மனியில் இருந்து வந்ததால் அவரை சென்று சந்தித்து பேசிவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் 33 வயது உடைய ஆணும் தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக இருவரையும் தனி வார்டில் அனுமதித்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்க வாய்ப்பு உள்ளதால், அவர்களின் ரத்தமாதிரிகளை எடுத்து சென்னை கிண்டி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூரில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துனை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது: ‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது 77 பேர் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலூரில் தங்கியுள்ளனர். அவர்களை தொடர்ந்து 28 நாட்கள் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளதால் அவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று வேலூரை சேர்ந்த ஒரு மருத்துவ மாணவிக்கும், ஒரு ஆண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதால், அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. ஆய்வக முடிவுகள் வந்த பிறகே உறுதியான தகவல் தெரிவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>