வேலூர் சின்னஅல்லாபுரத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போதை ஆசாமிக்கு தர்மஅடி

வேலூர், மார்ச் 19: வேலூர் சின்னஅல்லாபுரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியை கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், போதை வாலிபர் ஒருவர் சிறுமியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். அங்கு அந்த வாலிபருக்கு சரமாரி தர்ம அடி கொடுத்தனர். அந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர் கே.கே.நகரை சேர்ந்த கே.சுரேஷ்(33) என்பதும், கட்டிடத்தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த பாகாயம் போலீசார் அந்த வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னஅல்லாபுரம் கே.கே.நகர் பகுதி பெருமளவு கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாகும். இதனால் அங்கு பாக்கெட் சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளியாட்கள் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு இப்பகுதியில் ஆங்காங்கே உள்ள புதர்களின் மறைவில் அமர்ந்து குடிப்பதும், தெருக்களில் ஆபாசமாக பேசியபடி கலாட்டாவில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.தற்போது நடந்த சம்பவம் போல் அடிக்கடி நடக்கிறது. எனவே, இப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மாலை நேரம் தொடங்கி இரவு நேரம் முழுமையும் போலீஸ் ரோந்தையும் தீவிரப்படுத்துவதுடன், புறக்காவல் நிலையம் ஒன்றையும் சின்னஅல்லாபுரம் மந்தைவெளி பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: