ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா எச்சரிக்கை வழக்கு விசாரணைக்காக பொதுமக்கள் நீதிமன்றங்கள் வர தேவையில்லை

வேலூர், மார்ச்.19:ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்காக பொதுமக்கள் வர தேவையில்லை என்று நீதிபதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பூங்கா, சினிமா தியேட்டர்கள், மால்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தலைமை தாங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் நீதிபதி இந்திராணி, ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் நீதிபதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவனருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), எஸ்பிக்கள் பிரவேஷ்குமார், விஜயகுமார், மயில்வாகனன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கொரோனா வைரஸ் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள் வழக்கு விசாரணைக்காக அதிகளவில் வந்து செல்கின்றனர். இனி பொதுமக்கள் வழக்கு விசாரணைக்கும், சாட்சியங்களுக்கும் நேரில் வர கட்டாயம் இல்லை. வரவும் தேவையில்லை. வழக்கு விசாரணைக்கு 3 வாரங்களுக்கு வரவில்லை என்றாலும், அவர்களுக்கு எந்த ஒரு அபராதம், பிடியாணை போன்றவை போடமாட்டார்கள். மேலும் வேலூர் நீதிமன்றத்தில் உள்ள பார் அசோசியேஷன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சமரச மையம், உதவி மையம் மற்றும் ஆவின் பாலகம் என அனைத்தும் இன்று முதல் மூடப்படும். தேவையின்றி பொதுமக்கள் யாரும் நீதிமன்றத்தின் உள்ளே வரக்கூடாது. நீதிமன்ற பணியாளர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும். அவர்களை மருத்துவ குழுவினர் தெர்மல் கருவி மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வ்வாறு அவர்கள் கூறினர். இந்த கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை டீன் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>