‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு

நெல்லை, மார்ச் 19:   தமிழகத்தி கொரோனா நோய் பரவுவதை  தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும்  மூடப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் உள்ளிட்ட  அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் புதிய பஸ் நிலையம்,  ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு திறக்கப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை  தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை  தீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை வருகிற 31ம் தேதி வரை ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கான  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 20ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு  ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

பொதுவாக  தினமும் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படும். கலெக்டர்,  மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை அரசு  அலுவல்கள் தொடர்பாக பிற அலுவலர்களும், கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள்,  அரசியல் பிரமுகர்களும் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ்  பீதி காரணமாக கடந்த திங்கள் கிழமை முதல் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி  காணப்படுகின்றன. பொதுமக்கள், பிற துறை அரசு அலுவலர்கள், அரசியல்  பிரமுகர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது.

ஆய்வுக் கூட்டங்கள் ரத்து

கலெக்டர்  அலுவலகத்தில் பிற துறை உள்ளிட்ட ஆய்வுக் கூட்டங்கள் தினமும் நடத்தப்படும்.  ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு உள்ளிட்ட முக்கிய கூட்டங்கள் மட்டுமே  நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி  மாவட்டங்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான  முன்ெனச்சரிக்கை நடவடிக்கை குறித்து நெல்லை, தென்காசி கலெக்டர்கள்,  எஸ்பிக்களுடன் சுகாதார துறை உயர் அதிகாரிகள் கலந்துரையாடினார். பிற துறை கூட்டங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: