கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 3.18 லட்சம் குடும்ப தலைவிகள் பயன்: புதுகை கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, மே 11: புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வாயிலாக 3,18,083 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர் என்று புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று அன்றைய தினமே கையொப்பமிட்ட முத்தான ஐந்து திட்டங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட தனித் துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஆட்சிப் பொறுப்பேற்று முத்தான மூன்று ஆண்டுகளில் உலகமே அஞ்சிய கோவிட் -19 போன்ற பெரும் தொற்று, இயற்கை பேரிடர்களான அதீத கனமழை, இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளில் எல்லாம் மக்களோடு மக்களாக நின்று எந்நேரமும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தனைக் கொண்டு அம்மக்களை எந்த வழியிலேனும் ஏற்றம் பெற வைத்திட வேண்டும் என்பதையே தனது லட்சிய மூச்சாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் அரும்பணி ஆற்றி வரும் மக்களின் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்திரைப் பதிக்கும் கடந்த மூன்றாண்டுகளில் தொழில்துறையில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், ஏற்றுமதியில், கல்வியில், பொருளாதார வளர்ச்சியில், மருத்துவத்தில்,

கிராமங்கள் மற்றும் நகரங்களில் உட்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதலிடத்திலும், முன்னணியிலும் தமிழ்நாட்டினை முன்னிறுத்தி, ஏனைய பிற மாநிலங்களை ஏங்க வைத்ததோடு, இந்திய திருநாட்டையும் வியக்க வைத்து, நான்காம் ஆண்டில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கும் நம் மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றிள்ள எண்ணற்ற திட்டங்களில், முத்தான எட்டு திட்டங்களைப் பற்றி தமிழ்நாட்டின் திக்கெட்டிலும் உள்ள ஏழை எளியோர், பயனடைந்தோர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் நாளாது வரையில் 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 3,18,083 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 3.18 லட்சம் குடும்ப தலைவிகள் பயன்: புதுகை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: