எஸ்எஸ்எல்சி தேர்வில் 92% தேர்ச்சி: முதல் 3 இடத்தை மாணவிகள் பிடித்தனர்

திருவாரூர், மே 11: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த 10ம் வகுப்பு பொது தேர்வை 7 ஆயிரத்து 208 மாணவர்களும், 7 ஆயிரத்து 698 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 906 பேர்கள் எழுதிய நிலையில் 6 ஆயிரத்து 448 மாணவர்களும், 7 ஆயிரத்து 338 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 92.49 சதவீத தேர்ச்சியாகும்.
மேலும் மாவட்டத்தில் 36 அரசு பள்ளிகளும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 38 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இதில் மன்னார்குடி சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா தேவி, பாளையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி, குளிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஹர்ஷினி ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர். இதே போல் வாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரியானா மற்றும் ஹரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய ஆகிய இருவரும் 489 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். இதில்492 மதிப்பெண்கள் பெற்று கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்காதேவி 2ம் இடம் பிடித்துள்ளார். கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோயில் தெருவில் வசித்து வரும் நான்கு சக்கர மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியரின் மகள் துர்கா தேவி.

இவரது அண்ணன் மணிகண்டன் கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி துர்கா தேவி தமிழ் பாடத்தில் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் இவரை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும் எம்.எல்.ஏ வுமான பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி ஒன்றிய குழு துணை தலைவர் பாலச்சந்தர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, தலைமை ஆசிரியர் பூ தமிழ்ப்பாவை ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post எஸ்எஸ்எல்சி தேர்வில் 92% தேர்ச்சி: முதல் 3 இடத்தை மாணவிகள் பிடித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: