கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் ஜி.ஹெச்சில் சிகிச்சை பெற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

மதுரை, மார்ச் 18: சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கொரோனா நோய் அறிகுறி தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண்:1077, பொது தொலைபேசி எண் 0452-2546160 மற்றும் செல்போன் எண் 9597176061 செயல்படுகிறது.

பொதுமக்கள் இந்த தொலைபேசி எண்களில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக தங்களது சந்தேகங்கள், கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை தெரிவிக்கலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி அங்கன்வாடி மையங்கள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் விளையாட்டு அரங்குகள் ஆகியவை வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கிறது.

தொழிற்சாலைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிருமி நாசினி முகக்கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கொரோனா நோய் அறிகுறிக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். உறுதி செய்யப்படாத எந்த தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டும். பொய்யான தகவலையோ, வதந்தியை, தேவையற்ற பீதியை சமூக வலைதஙத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் வழக்கம் போல் இயங்கும். பொதுமக்கள் இசேவையை பயன்படுத்தி தகவல்கள் தெரிவிக்கலாம்’ என்றார்.

Related Stories: