கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

 

மதுரை, ஏப். 29: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய, கோடை விடுமுறை எதிரொலியாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதேபோல் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா நிறைவு பெற்றுள்ளது.

திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், குழந்தைகளுடன் கோயிலுக்கு வருவதை பலரும் தவிர்க்கின்றனர். இதுபோன்றவர்கள் திருவிழா நிறைவடைந்த பிறகு கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கிடையே தற்போது பள்ளி, கலலூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்தது.

அவர்கள் அம்மன் மற்றும் சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகம் அருகே சித்திரை வீதியில் உள்ள நகை, ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், கோயில் வளாகத்தில் இருந்த பிரசாத ஸ்டால்களில் லட்டு, அப்பம், முருக்கு மற்றும் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்களும் அதிகளவில் விற்பனையானது.

The post கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: