தேர் கடை வாடகை வசூலில் முறைகேடு விவகாரம் மன்னிப்பு கேட்டு பீடிஓவுக்கு கடிதம்

காங்கயம், மார்ச் 12: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயில் தேர் திருவிழா தற்காலிக கடை வாடகை வசூலில் முறைகேடு செய்த ஒப்பந்தாரர் மன்னிப்பு கேட்டு பீடிஓ வுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் கடந்த மாதம் 8ம் தேதியன்று தைப்பூசத் தேரோட்டம் துவங்கியது. இதில் கரும்பு கடையில் துவங்கி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் துணிக்கடைகள் இரும்பு கடைகள் என பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. இந்த கடையை சிவன்மலை சுகுமாரன் என்பவர் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இதில் அரசு விதிகளுக்கு புறம்பாக ஒப்பந்ததாரர் அதிக வாடகை வசூல் செய்வதுடன் வாடகை வசூல் செய்வதற்கான உரிய ரசீது வழங்கப்படவில்லை என கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

 இதையடுத்து காங்கயம் யூனியனில் இருந்து கடந்த மாதம் 15ம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. பதில் வராததால் மீண்டும் கடந்த 3ம் தேதி மீண்டும் இரண்டாம் முறை நோட்டீஸ் அனுப்பட்டது. இது குறித்து காங்கயம் பீடிஓ ரமேஷ் கூறுகையில், ‘‘தற்காலிக கடைகள் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் சுகுமாரனுக்கு விளக்கம் கேட்டு இரு முறை நோட்டீஸ் அனுப்பட்டதையடுத்து பதில் அளித்துள்ளார். அதில் தன்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் தவறாக டோக்கனை தந்து விட்டார்கள். பின்பு அதை மாற்றி உரிய ரசீது வழங்கப்பட்டது. எனவே அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மன்னிப்பு அளிக்கவேண்டும் என கேட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் பரிசீலனை செய்து பின்பு அபராதம் விதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்,’’ என்றார்.

Related Stories: