பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

கோவை,மார்ச்.12: விஷமத்தனமான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் கோவை ஆத்துப்பாலத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஒருவருக்கொருவரை தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் கடந்த சில நாள்களாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் லீக், ஜமாத் இஸ்லாம் உள்பட 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலையில் நடந்த கூட்டத்தில் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், விவேகானந்தர் பேரவை, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும், பிற்பகல் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:  கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி பேணி பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும்  காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக அச்சமின்றி இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அமைப்பினர் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்கவும், அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் அவர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். எந்த நிலையிலும் பொது அமைதிக்கு பங்கம் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது அமைதிக்கும் பங்கம் விளைவிப்பவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வன்முறை சம்பங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையின் நடவடிக்கைக்கு தப்ப முடியாது. இரு தரப்பினரும் அமைதியையே விரும்புகின்றனர். அமைப்புகளின் பெயர்களை சொல்லி ஒரு சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது எந்த பாகுபடும் இல்லாமல்  நடவடிக்கை எடுக்க இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் விஷமத்தனமான பிரசாரங்களை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அச்சமின்றி இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு ராஜாமணி கூறினார்.

Related Stories: