மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றங்கரையில் எச்சரிக்கை பலகை வைப்பு

 

மேட்டுப்பாளையம், மே 3: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவையின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளை நாடிச்செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பொதுமக்கள் அங்குள்ள ஆற்றின் ஆழம், சேறு, சகதி உள்ளிட்டவை குறித்து எவ்வித விவரமும் அறியாமல் ஆற்றில் குளித்து தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

அண்மையில் பொள்ளாச்சி ஆழியார் அணைப்பகுதியில் கோவை சட்டக்கல்லூரி மாணவரும், கோவை பேரூர் அருகே அணைக்கட்டில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் மூவரும் பரிதாபமாக பலியாகினர். நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கோவை மாவட்ட கலெக்டர் நீர்நிலைகளை ஒட்டி எச்சரிக்கை பலகைகளை அமைக்கவும், வலைகளை அமைக்கவும் உத்தரவிட்டார். அந்த வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் நகராட்சியின் சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பதாகைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஆற்றில் இறங்கக்கூடாது.  மீறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் மற்றும் லைப் கார்ட்ஸ் குழுவினர் 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மீறி பவானி ஆற்றில் இறங்கும் மக்களை எச்சரித்து அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றங்கரையில் எச்சரிக்கை பலகை வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: