அருப்புக்கோட்டை நகராட்சி நேருநகரில் ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய்க்கு விற்பனை அடிப்படை வசதிகள் இல்லாததால் வரிகொடா இயக்கம் நடத்த திட்டம்

அருப்புக்கோட்டை, மார்ச் 6: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்டது நேருநகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 5 தெருக்கள் உள்ளன. காலனி உருவாகி 25 வருடங்களுக்கு மேலாகிறது. இங்குள்ள ரோடுகள் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளாகிய நிலையில் ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. தெருக்களில் வாறுகால் கட்டும் போது தரமற்று கட்டியதால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு, கொசுஉற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் கொசுக்கடியால் தொற்றுநோய் ஏற்பட்டு வருகிறது.

திருச்சுழி ரோடு, காந்திநகர் சர்வீஸ் ரோடு பகுதியில் ஓடைகளை தனியார் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. மழைக் காலங்களில் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் நேரு நகருக்குள் உள்ள வீடுகளை சூழ்ந்து விடுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமூதாய கழிப்பிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஆனால், பல வருடங்களாகியும் சமுதாயக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இடிந்து விழும் சூழல் உள்ளது. மேலும் தாமிரபரணி குடிநீர் இந்த பகுதிக்கு கிடைக்கவில்லை. இதற்கு பகிர்மான குழாய் முறையாக பதிக்கப்படவில்லை. குடிநீர் குழாய் இணைப்பிற்கு நகராட்சியில் டெபாசிட் செலுத்தி பின் குழாய் பதிக்காததால் திருப்பி கொடுத்து விட்டனர். தனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பியே உள்ளனர்.

போதுமான அடிகுழாய்கள் இருந்தும் சரிவர பராமரிப்பதில்லை. நகராட்சியில் பலமுறை கூறிய பின்பே பழுது நீக்குகின்றனர். அடிகுழாய் மற்றும் மினிபவர் பம்பில் உள்ள தண்ணீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது. இதனால் இந்த தண்ணீரை புழக்கத்திற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த பகுதி மக்களுக்கு தாமிரபரணி குடிநீர் கிடைப்பதற்கு பகிர்மான குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை, வாறுகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த ரெங்கநாயகம் கூறுகையில், `` நேருநகர் உருவாகி 25 வருடங்களுக்கு மேலாகியும் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. திருச்சுழி ரோடு, காந்திநகர் பகுதியில் ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைநீர், கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. நேருநகர் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தராவிட்டால் வரி கொடா இயக்கம் நடத்துவோம். நேருநகர் குடியிருப்போர் நல அறக்கட்டளை கூட்டத்தில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றி ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம்’’ என்றார்.

கண்ணன் கூறுகையில்,`` சாலை அமைத்து 15 ஆண்டுகளான நிலையில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் ரோட்டை அளந்து சென்றனர். ஆனால், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. தாமிரபரணி குடிநீரும் எங்கள் பகுதிக்கு வரவில்லை. குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறோம். ஓடை ஆக்கிரமிப்பால் மழைக்காலத்தில் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விடுகிறது. மேலும் குப்பை கொட்ட குப்பைத்தொட்டி வசதி இல்லை. வாறுகால் முறையாக சுத்தம் செய்ய வருவதில்லை. அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தமாட்டோம். வரிகட்டியும் பலன் இல்லை’’ என்றார்,

Related Stories: