ஆதிதிராவிடர் இடத்தை போலியாக கிரையம் செய்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

ஈரோடு, மார்ச் 6: ஆதிதிராவிடர்களுக்கான இடத்தை போலியாக கிரையம் செய்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு கோட்டை ராமசாமி சந்து பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். சமூக ஆர்வலர். இவரது தலைமையில்  சென்னிமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவிற்குட்பட்ட வடமுகம் வெள்ளோடு கொம்மகோவில் பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.சேனாபதி (எ) சின்னக்கண்ணு மற்றும் தோப்புபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கருமாண்டிசெல்லிபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடருக்கு அரசால் வழங்கிய நிபந்தனை பட்டா பூமியை அதற்கான அரசு ஆவணங்களை மறைத்தும், போலியாக தயாரித்தும் கிரயம் செய்துள்ளனர்.

இந்த பூமியில் முறையற்ற வகையில் அரசிற்கு தெரியாமல் அதிகளவில் கிராவல் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனால், அந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பல அறிய வகை மரம், செடி, பறவை மற்றும் விலங்கினங்களும் அழிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பெருந்துறை தாலுகா சென்னிமலை, கொங்கம்பாளையம் கிராமத்திலும் முறைகேடாக கிராவல் மண்ணை வெட்டு எடுத்து சேனாபதியும், சுப்பிரமணியமும் சேர்ந்து விற்பனை செய்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் சேனாபதி, சுப்பிரமணியத்திற்கு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் 7 கோடியே 99 லட்சத்து 73 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக விதித்துள்ளார்.

இதில், சேனாபதி என்பவர் அதிமுக பிரமுகர். இவர் மீது பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கிராவல் மண் வெட்டி கடத்திய வழக்கிலும் சேனாபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிபந்தனை பட்டா பூமியை அரசை ஏமாற்றி போலியாக கிரயம் செய்தது தொடர்பாகவும், அரசின் அனுமதி பெறாமல் கிராவல் மண் வெட்டி எடுத்தது தொடர்பாகவும் இவர்கள் இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: