உடன்குடியில் இருதரப்பினர் மோதல் 14 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது

உடன்குடி, மார்ச் 5:  உடன்குடியில் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக  இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்  உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். உடன்குடி  வைத்திலிங்கபுரம் உச்சினி மாகாளியம்மன் கோயிலை ஹரிஹர ஐயப்பன் (40)  என்பவர் நிர்வாக  கமிட்டி செயலாளராக நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக ஊர் மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் ஹரிஹர ஐயப்பன்  கூறிய வரிப்பணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்த ஒருதரப்பினர் தகராறில் ஈடுபட்டனர். இது மோதலாக மாறியதில் ஹரிஹர ஐயப்பனை அதே ஊரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நகரச் செயலாளர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் முத்துகுமார், மாரிமுத்து,  உடன்குடி நகர பொறுப்பாளர் முத்துகுமார், பாலகிருஷ்ணன்,  மற்றொரு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

ஆனால், அதே வேளையில் இந்து மக்கள் கட்சி நகரச் செயலாளர் மணிகண்டன் அளித்த புகாரில், ஊர் மக்கள் கூடி வரி  போடுகையில் வரிகுறித்து எதுவும் பேசக்கூடாது எனக் கூறி  அய்யாத்துரை,  மந்திரம், சதீஷ்கிருஷ்ணன், ஹரிஹர ஐயப்பன், ராம்குமார், சிவமுருகன்,  இந்துமகா சபா மாநில செயலாளர் ஐயப்பன், சண்முக ஆனந்தன்   இரும்புக்கம்பியால் தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிக்சை பெற்று வருகிறார். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில்  14 பேர் மீது வழக்குப் பதிந்த குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராதிகா, இருதரப்பையும் சேர்ந்த ராம்குமார், சண்முக ஆனந்தன், முத்துகுமார்,  மற்றொரு முத்துகுமார், பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தார். எஞ்சிய 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: