செந்துறை அருகே பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது

அரியலூர், மார்ச் 4:செந்துறை அருகே பள்ளி வேன் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் மாணவர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பள்ளிப்பேருந்து, வேன்கள் மூலம் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்எஸ் மாத்தூர் பகுதியிலிருந்து புறப்பட்ட பள்ளி வேன் படைவெட்டிக்குடிக்காடு, சோழன்குடிக்காடு, மணக்குடையான், சித்துடையார் பகுதியில் உள்ள 17 மாணவர்களை ஏற்றிக்கொண்டு குழுமூர் நோக்கி சென்றது. அப்போது சித்துடையார் கிராமத்தை சேர்ந்த ஜெகன்நாதன் (75) என்பவர் மீது மோதாமல் இருக்க திரும்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஜெகன்நாதன், மாணவர்கள் நந்தையன்குடிக்காடு விக்னேஷ் (15), அசாவிரன்குடிக்காடு அஜய்சங்கர்(15) ஆகியோர் படுகாயமும், மற்ற மாணவர்கள் லேசான காயமடைந்தனர். காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: