அய்யம்பட்டி-குச்சனூர் இடையே சரளைக் கற்களை பரப்பியதோடு நிற்கும் சாலைப்பணி விரைந்து முடிக்க கோரிக்கை

சின்னமனூர், மார்ச் 4: சின்னமனூர் அருகே, கிடப்பில் போடப்பட்ட அய்யம்பட்டி-குச்சனூர் இணைப்புச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தென்னை, காய்கறிகள், தக்காளி, வாழை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து குச்சனூருக்கு செல்லும் இணைப்புச் சாலை சுமார் 2 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கியது. விவசாயப் பணிகளுக்கு செல்லும் வாகனங்களின் டயர்களும் பஞ்சராகின. இதனால், போக்குவரத்துக்கு விவசாயிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜேசிபி மூலம் சாலையை பெயர்த்து சரளைக் கற்களை பரப்பினர். அதன்பின் சாலைப் பணியை கிடப்பில் போட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் கிழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட அய்யம்பட்டி-குச்சனூர் இணைப்புச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: