ஜெயங்கொண்டம் அருகே இரண்டாவது திருமணம் செய்த வாலிபர், மாமியார் மீது வழக்கு முதல் மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

ஜெயங்கொண்டம், மார்ச் 3: ஜெயங்கொண்டம் அருகே இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தூத்தூர் கிராமம் அன்பழகன் மகன் மணிகண்டன்(35) என்பவரும், அரியலூர் பகுதியை சேர்ந்த சாந்திப்பிரியா(20) என்பவருக்கும். கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 15 பவுன் நகை சுமார் மூன்றரை லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை இல்லை என்ற காரணம் கூறி, சாந்திபிரியாவிடம் அவரது கணவர் மணிகண்டன், மாமியார் லோகாம்பாள் ஆகியோர் மேலும் வரதட்சணையாக ஒரு லட்சம் பணம் 5 பவுன் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி சாந்திபிரியாவின் செல்போனிற்கு திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த அச்சுதன் மகள் வித்யா என்பவர் தொடர்பு கொண்டு மணிகண்டன் தன்னை திருமணம் செய்துள்ளதாகவும், திருமண புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அதிர்ச்சி அடைந்த சாந்திப்பிரியா ஏற்கனவே தனக்கும் மணிகண்டனுக்கும் திருமணம் நடந்துள்ளதை கூறியுள்ளார். ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதை அறிந்த வித்யா இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுஎதுவும் தெரியாமல் கடந்த மாதம் 29ம் தேதி வீட்டிற்கு வந்த மணிகண்டனிடம் அவரது மனைவி சாந்திப்பிரியா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து தன்னிடம் வரதட்சணை கேட்பது குறித்து கேட்டுள்ளார். மணிகண்டன் மற்றும் அவரது தாயார் லோகாம்பாள் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விடுவதாக கூறியதாக சாந்திப்பிரியா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், மணிகண்டன் கடந்த 1ம்தேதி அடிதடியில் ஈடுபட்டு தூத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மற்றும் அவரது தாயார் லோகாம்பாள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: