வடுவூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

மன்னார்குடி, மார்ச் 3: வடுவூர் அருகே உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். வடுவூர் மற்றும் அதன் சுற்று புற ஊர்களின் வழியாக உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆறுகள் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து மணல் கடத்தி கொண்டு வருவதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன் பேரில் மாவட்ட எஸ்பி துரை உத்தரவின் பேரில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடுவூர் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அதே காவல் சரகத்திற்குட்பட்ட வடுவூர் வடபாதி மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே டாரஸ் லாரி ஒன்று வந்தது. போலீசாரை கண்டதும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதனை கண்ட போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்டதில் அதில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இருந்து உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து வடுவூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: