உத்தமபாளையத்தில் தேரோட்டத்தை கண்காணிக்க 17 இடங்களில் சிசிடிவி

உத்தமபாளையம், பிப். 28: உத்தமபாளையத்தில் தேரோட்ட திருவிழாவை கண்காணிக்க, 17 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயில் மாசிமக தேரோட்டம் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நகரில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. தினந்தோறும் நான்கு ரத வீதிகளின் வழியே சாமி புறப்பாடு நடக்கிறது. கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. இதை கண்காணிக்கும் வகையில், அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் நகரின் நலன் கருதி, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகரில் உள்ள பஸ்நிலையம், தேரடி, வடக்குத்தெரு, கோட்டை மேடு, சுங்கச்சாவடி என 17 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இவை தேரோட்டம் முடியும் வரை தற்காலிகமாகவும், அதன் பின்பு 6 இடங்களில் நிரந்தரமாகவும் பொருத்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘நகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேரோட்டம் நடப்பதால் தற்காலிகமாக சில இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. நிரந்தரமாக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன’ என்றனர்.

Related Stories: